சாத்தான்குளத்தில் ஜனநாயகன் படத்தின் 70அடி உயர பேனர் அகற்றம் : தவெக நிர்வாகி மீது வழக்கு..!

சாத்தான்குளத்தில் ஜனநாயகன் படத்தின் 70அடி உயர பேனர் அகற்றம் : தவெக நிர்வாகி மீது வழக்கு..!

சாத்தான்குளம் திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த 70 அடி உயர ஜனநாயகன் படத்தின் பேனர் அகற்றப்பட்டது. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சாத்தான்குளத்தில் உள்ள திரையரங்கில் வரும் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையிடவிருந்தது. சென்சார் போர்டு அனுமதி கிடைக்காததால் அப்படம் குறித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில் தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் சார்பில் சாத்தான்குளத்தில் உள்ள திரையரங்கு அருகே சாலையோரம் மக்களை அச்சுறுத்தும் வகையில் 70 அடி உயரத்தில் சாரம் அமைத்து பேனர் கட்டப்பட்டது. இதற்கு காவல் துறையின் அனுமதி பெறவில்லையாம். இதையறிந்த சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஆகியோர் அந்த பேனரை பார்வையிட்டனர்.

பின்னர் வட்டாட்சியர் உத்தரவுப்படி பேனரை போலீசார் அகற்றினர். மேலும், அனுமதியின்றி பேனர் வைத்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தவெக மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்னை விஜி. சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர் .

இதனிடையே தீயணைப்பு துறையினர் பேனரை கழற்ற வந்த இடத்தில் அவர்கள் மேலே ஏறி பேனரை கழற்றுவதற்கு பதிலாக இரு சிறுவர்களை 60 அடி உயர பேனரை கம்பத்தின் மேலே ஏற வைத்து ஆபத்தான முறையில் அந்த பேனரை கீழே இறக்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.