தூத்துக்குடியில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் : இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய வருவாய் பணிகள் முற்றிலும் பாதிப்பு!
தூத்துக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி இறக்கப் பாதுகாப்பு அரசாணை உடனே வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி உண்ணாவிரத போராட்ட்த்தில் ஈடுபட்டனர், அதனை தொடர்ந்து இரனடாவது கட்டமாக வியாழக்கிழமை முதல் அனைத்து பணிகளையும் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சுவாமி நாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேசி.முருகன், சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க வட்ட தலைவர் குமரன் நன்றி கூறினார்.
அதேபோல் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டகிளைத் தலைவர் கருப்பசாமி தலைமையிலும், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணைத் தாசில்தார் ரம்யாதேவி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக மாவட்ட தலைவர் சுவாமி நாதன் கூறுகையில்,
இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால் வருகின்ற 27ஆம் தேதி முதல் அனைத்து வருவாய் அலுவலர்களும் தொடர் விடுப்பு போராட்டம் மேற்கொள்ள உள்ளோம்,இன்றைய தினம் அனைத்து வருவாய் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அதி திராவிடர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள், இஸ்ரோ உள்ளிட்ட பணிகளில் ஈடுபட கூடிய 472 பேர் முழு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் சான்று வழங்கும் பணி, இஸ்ரோ பணி, உட்பட அனைத்து வருவாய் துறை சார்ந்த பணிகள் முடங்கியுள்ளது என கூறினார்.
படம் குறிப்பு:
வருவாய் துறை அலுவலர்கள் பணி புறக்கனிப்பு காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட வாருவாய்துறை அலுவலகம்.