தூத்துக்குடியில் உள்ள ஆழ்வார் கடையில் ஆய்வு - வழக்கு பதிவு செய்யவும், முன்னேற்ற அறிவிப்பு வழங்கவும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உத்திரவு.

தூத்துக்குடியில் உள்ள ஆழ்வார் கடையில் ஆய்வு - வழக்கு பதிவு செய்யவும், முன்னேற்ற அறிவிப்பு வழங்கவும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உத்திரவு.

சுகாதாரத்துறை செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., உணவு பாதுகாப்பு ஆணையர் திரு.லால்வேணா, இ.ஆ.ப.,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப ஆகியோரின் வழிகாட்டுதலில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அச்சிறப்பான செயல்பாட்டினைத் தொடரும் விதமாக, ஊடகங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், தூத்துக்குடியில் உள்ள ஆழ்வார் நைட் கிளப் என்ற உணவகம், இன்று (29.06.2024) மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் அவர்களால் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. ஆழ்வார் நைட் கிளப் என்ற உணவகத்தில் பழைய சிக்கன் கிரேவி, காடை கிரேவி மற்றும் பரோட்டாக்கள் ஏதும் மீதம் உள்ளதா என்றும், ஏதேனும் கெட்டுப்போன உணவுப் பொருட்கள் உள்ளதா என்ற கோணத்திலும் ஆய்வு செய்யப்பட்டதில், அவ்வாறு பழைய சிக்கன், காடை பரோட்டா போன்ற உணவு பொருட்களும், கெட்டுப்போன உணவுப் பொருட்களும் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இன்றைய தயாரிப்பிற்கு புதிதாக சிக்கன் மற்றும் காடை வாங்கப்பட்டுள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டது. அதற்கான பில்களை உரிமையாளரால் சமர்ப்பிக்கப்பட்டது.

இருப்பினும், உணவு தயாரிக்க பயன்படும் குடிநீர் குறித்த பகுப்பாய்வு அறிக்கையும், தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை சீரான கால இடைவெளியில் பகுப்பாய்வு செய்ததற்கான ஆதாரங்களும், பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைச் சான்றிதழ்களும் இல்லை என்பதுடன், பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உடை இன்றியும், தலைக்கவசம் இன்றியும் பணிபுரிந்து வந்துள்ளனர். மேலும், உணவு தயாரிப்பதற்கு அயோடின் கலக்காத உப்பு பயன்படுத்தப்பட்டதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே, மேற்கூறிய குறைகளை களைய ஏதுவாக, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் பிரிவு 32-ன் கீழ் முன்னேற்ற அறிவிப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முன்னேற்ற அறிவிப்பில் உள்ளவற்றை 14 தினங்களுக்குள் சரிசெய்யாவிடில், அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்யப்படும். இருந்தாலும், மேற்கூறிய ஆவணங்களை இதுநாள்வரை பராமரிக்கப்படாததினால், ஆழ்வார் நைட் கிளப் உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உத்திரவிடப்படும்.

*ஹோட்டல்/ரெஸ்டாரண்ட் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:*

1. அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில், தங்களது வணிகத்திற்குச் *சரியான வகையில்* உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.

2. சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதியற்ற செயற்கை நிறமிகளை உபயோகிக்கக் கூடாது.

3. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.

4. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் விபரச்சீட்டில், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளிட்ட லேபிள் விபரங்கள் அவசியம் குறிப்பிட்டிருக்கின்றதா என்பதை ஆய்வு செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.

5. காலாவதியான உணவுப் பொருட்களை பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது.

6. உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காவண்ணதும், தூசிகள் விழாதவாறும் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.

7. ⁠முதல் நாள் தயாரித்த உணவுப் பொருட்களில் மீதமானவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து, அடுத்த நாள் நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது. மாறாக அதனை அப்புறப்படுத்தி, பதிவேட்டில் விபரங்கள் பராமரிக்க வேண்டும்.

8. முன்தயாரிப்பு செய்த அசைவ உணவுப் பொருட்கள் வைக்கப்பட்ட பாத்திரத்தில், முன்தயாரிப்பு செய்த நாள் மற்றும் நேரம் குறிப்பிட வேண்டும்.

9. உணவகங்களில் உள்ள பணியாளர்களுக்கு, தொற்றுநோய்த் தாக்கமற்றவர் என்பதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தலைத்தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்.

10. அனைத்துப் பணியாளர்களும் டைஃபாய்டு தடுப்பூசி உள்ளிட்ட உணவின் மூலமாகப் பரவக்கூடிய நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.

மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்படுகின்றது.

இவண்,

டாக்டர்.ச.மாரியப்பன்,

நியமன அலுவலர்,

உணவு பாதுகாப்புத் துறை,

தூத்துக்குடி மாவட்டம்.