திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் தமிழில் கும்பாபிஷேகம் : கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி செந்தமிழில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. கோவிலில் யாகசாலை பூஜை வரும் ஜூலை 1ல் தொடங்க உள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழில் வேதங்கள் ஓத வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. அரசியல் தலைவர்கள், பக்தர்கள் என பல்வேறு தரப்பிலும் இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி காலை 6.15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசை ஆகியவை நடைபெறும் எனவும், பன்னிரு திருமுறைகள் திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேள்விச்சாலை வழிபாடு நாட்களில், வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். காலை 7 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்" என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.