முன்பதிவு குறைவு: 6 தீபாவளி சிறப்பு ரயில்கள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு!

முன்பதிவு குறைவு: 6 தீபாவளி சிறப்பு ரயில்கள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு!

முன்பதிவு குறைவாக இருப்பதால் 6 தீபாவளி பண்டிகை கால சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் திரும்புவதற்கு ஏதுவாக பல்வேறு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் முன்பதிவு குறைவாக இருப்பதால், 22 முதல் 29-ம் தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி நாளை 22-ம் தேதி புதன்கிழமை மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு கோட்டயம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் வண்டி எண். 06121 முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் 23-ம் தேதி வியாழக்கிழமை மதியம் 2.05 மணிக்கு கோட்டயத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரை இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் வண்டி எண். 06122 முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24, 26 ஆகிய தேதிகளில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் வண்டி எண். 06153 முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் வண்டி எண். 06154 முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து 28-ம் தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் (06054) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வாரம் 29-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் வரை செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் வண்டி எண். 06053 முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.