மே 22 ஐ "சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக" அறிவிக்க வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு!

மே 22 ஐ "சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக" அறிவிக்க வேண்டும், சூழலியல் காக்க தமிழ்நாடு அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மே 22 ஐ "சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக" அறிவிக்க வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு!

மே 22 ஐ "சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக" அறிவிக்க வேண்டும், சூழலியல் காக்க தமிழ்நாடு அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள மின் அறிக்கையின் விபரம்; மானுடம் காக்க சூழலியல் காக்க ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக 23 ஆண்டுகால போராட்டத்தின் உச்சகட்ட‌மாக 2018 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களின் ஒரு பகுதியாக 2018 மே 22 ல்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனு கொடுக்க முற்பட்டோம். அப்போது கடந்த அரசு  காவல்துறையினரை கொண்டு காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூட்டினை நடத்தியும், அடித்தும் எங்கள் உயிரினும் மேலான 15 உறவுகளை படுகொலை செய்தார்கள். நூற்றுக்கு மேற்பட்ட எங்களின் உறவுகளின் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தி உடல் உறுப்புகளை சிதைத்தார்கள்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் உயிர்ச் சூழல் காக்க படுகொலையுண்ட தியாகிகளுக்கு 5வது ஆண்டு வீரவணக்க நிகழ்வுகளை தூத்துக்குடியில் குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர் புரம்,பாத்திமாநகர், தோம்மையார் கோவில் தெரு, பூபாலராயர்புரம், முத்தையாபுரம், லயன்ஸ்டவுன் ஆகிய பகுதிகளில் 22.05.2023 அன்று காலை 6.30 மணி 12.00 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம்.  மேலும் தியாகளின் சமாதிகளில் மலர்தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

எங்கள் உயிரினும் மேலான அப்பாவி உறவுகளை காக்கை குருவிகளை சுடுவது  போல தேடித் தேடிச் சென்று திட்டமிட்டு ஈவு இரக்கமில்லாமல்  கொலை செய்தார்கள் காவல்துறையினர் என நாங்கள் சொல்லவில்லை. தமிழ்நாடு சட்டசபையில் 2022 மே 18 ல் தாக்கல் செய்யப்பட்டதாக‌ நீதி அரசர்  அருணா ஜெகதீசன்  அவர்களின் தலைமையிலான ஒரு நபர் ஆணைய அறிக்கை தெளிவாக சொல்கிறது. இச்சூழலில் தூத்துக்குடி படுகொலைகள் நடைபெற்று ஆண்டுகள் 5 ஆகியும் நீதி இல்லை. சமூக நீதி அரசு என சொல்லிக்கெள்ளும் தமிழ்நாடு அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது. எங்களின் கீழ் கண்ட கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றிட கோருகிறோம்.

கோரிக்கைகள்: தமிழ்நாடு அரசு மானுடம் காக்க, உயிர்ச்சூழலியல் காக்க ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எமது மண்ணை விட்டு நிரந்தரமாக அகற்றிட தமிழ்நாடு முதல்வர் உறுதி அளித்தபடி சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்றிட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தமிழ்நாடு முதல்வர் உறுதி அளித்தபடி இனியும காலம் தாமதிக்காது நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காவல் கொலையாளிகளை, வருவாய்துறை கொலையாளிகளை கொலை வழக்கின் கீழ் கைது செய்து கூண்டில் ஏற்றி உச்சபட்ச தண்டனை கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். ஒரு தலைப்பட்சமான சிபிஐ விசாரணையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது.

தூத்துக்குடியின் மையப் பகுதியில் சூழலியல் காக்க மானுடம் காக்க படுகொலையுண்ட மனித குலத்தின் மகத்தான எமது 15 தியாக உறவுகளின் நினைவாக நினைவகம் அமைத்திட வேண்டும். மே 22 ஐ "சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக" அறிவிக்க வேண்டும்.என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.