கிணற்றுக்குள் தவறி விழுந்த ம.தி.மு.க. நிர்வாகி சாவு
கயத்தாறில் கிணற்றுக்குள் தவறி விழுந்த ம.தி.மு.க. நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தேவர் காலனியை சேர்ந்த பாலையாத்தேவர் மகன் கோமதி பாண்டியன் (58). இவர் ம.தி.மு.க. நகர துணை செயலாளராக இருந்து வந்தார். மேலும், இவர் கயத்தாறில் டீக்கடை நடத்தி வந்தார். மாற்றுத்திறனாளி. இவர் தினமும் இரவு கடையை பூட்டிவிட்டு பேரூராட்சி பூங்காவில் சிறிது நேரம் இருந்து விட்டு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு அவர் நீண்ட நேரமாக வீட்டுக்கு வராததால் மனைவி மற்றும் மகன்கள் அவரை தேடியுள்ளனர். அவர் வழக்கமாக அமரும் பூங்காவுக்கு சென்றபோது, அங்குள்ள கிணறு அருகில் சைக்கிள் மட்டும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சந்தேகமடைந்து கிணற்றுக்குள் பார்த்தனர். ஆனாலும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கயத்தாறு போலீசாருக்கும், கழுகுமலை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் ெதரிவிக்கப்பட்டது. கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் மாயாண்டி தலைமையில் வீரர்கள் கிணற்றில் குதித்து தேடினர். அப்போது தண்ணீரில் மூழ்கியிருந்த அவரது உடலை மீட்டு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அவரது உடலை கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வன் மற்றும் போலீசார் பெற்று,கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடையை பூட்டிவிட்டு பூங்காவிற்கு வந்த அவர் கிணற்று சுவரில் ஏறி உட்கார முயற்சித்ததில், தவறி உள்ளே விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், ராமச்சந்திரன், கருத்தபாண்டி, பாலசந்திரன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.