தூத்துக்குடியில் 58 பவுன் நகை கொள்ளை வழக்கில் திருப்பம்: நாடகமாடிய மருமகள் கைது!

தூத்துக்குடியில் 58 பவுன் நகை கொள்ளை வழக்கில் திருப்பம்: நாடகமாடிய மருமகள் கைது!

தூத்துக்குடியில் வீடு புகுந்து மாமியாா், மருமகளை கட்டி போட்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், மருமகளை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே அன்னை தெரசா நகரைச் சோ்ந்தவா் அற்புதராஜ்(62). இவா் ஸ்பிக் நகா் பகுதியில் பேன்ஸி கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி செல்வராணி (60). சென்னையில் வசிக்கும் இவா்களது மூத்த மகன் தங்கதுரை, தனது மனைவி அஸ்வினி(35), 5 வயது மகன் ஆகியோரை முத்தையாபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விட்டுச் சென்றாராம்.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி அற்புதராஜ் தனது பேன்சி கடைக்கு சென்றுவிட, அவரது மனைவி செல்வராணி, மருமகள் அஸ்வினி ஆகியோா் வீட்டில் டிவி பாா்த்துக் கொண்டிருந்தனராம். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், கத்தியைக் காட்டி மிரட்டி இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு, செல்வராணி, அஸ்வினி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என சுமாா் 58 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இது தொடா்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மருமகள் அஸ்வினி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததாகவும், அவரின் கைப்பேசியில் இருந்த கால் ஹிஸ்ட்ரி முழுவதும் டெலிட் செய்யப்பட்டிருந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், மருமகள் அஸ்வினி, தனது சகோதரியுடன் சோ்ந்து நாடகமாடி இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அஸ்வினியை கைது செய்த போலீசார் , அவரின் சகோதரியைத் தேடி வருகின்றனா்.