“தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு ஆட்சிவாய்ப்பு இல்லை; ஆட்சியில் பங்கு கோருவது திமுக கூட்டணியில்தான்” – கோவில்பட்டியில் கடம்பூர் செ. ராஜூ அதிரடி பேட்டி

“தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு ஆட்சிவாய்ப்பு இல்லை; ஆட்சியில் பங்கு கோருவது திமுக கூட்டணியில்தான்” – கோவில்பட்டியில் கடம்பூர் செ. ராஜூ அதிரடி பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. மேலும், கிருஷ்ணா நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட போர்வெல் மற்றும் குடிநீர் தொட்டி திறப்பு விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும், ஆட்சி மாற்றத்தால் அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியம் மூலம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முதல்வர் அறிவித்துள்ள ரூ.4 லட்சம் நிவாரணம் போதாது என்றும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் அரசு, தொழிலில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கூட்டணி அரசியல் தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றது குறித்து கேட்கும் ஊடகங்கள், திமுக தலைவர்கள் டெல்லி சென்றதையும் கேட்க வேண்டும் என்றார். அமித்ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு கூட்டணி தொடர்பானது என்று எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். சில அரசியல் விஷயங்களை வெளிப்படையாக கூற முடியாது என்றும் குறிப்பிட்டார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசிய அவர், “தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகள் ஆட்சியில் உள்ளே வர வாய்ப்பு இல்லை. திமுகவிற்கு மாற்று அதிமுக தான்” என்றார். தமிழகத்தில் பாரம்பரியமாக அதிமுக மற்றும் திமுக இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது என்றும் தெரிவித்தார்.

“எங்கள் கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற குரல் இல்லை. அது திமுக கூட்டணியில்தான் ஒலிக்கத் தொடங்கியுள்ளது” என்றும் அவர் கூறினார். 2006 ஆம் ஆண்டு திமுக குறைந்த பெரும்பான்மை அரசாக இருந்தது; காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்தப்பட்டது எனவும் நினைவூட்டினார்.

வைகோ மற்றும் மதிமுக குறித்து கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசியல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி தற்போதைய கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து விமர்சனம் முன்வைத்தார். தமிழக வெற்றி கழகத்தின் நிலை தேர்தல் முடிவில் தான் தெரியும் என்றும், முதல் தேர்தலில் ஆட்சி அமைத்தது அதிமுக மட்டுமே என்றும் கூறினார்.

நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அரசியல் களத்தில் அதிமுக – திமுக இடையேதான் போட்டி நடைபெறும் என்றும், தனிப்பட்ட மற்றும் குடும்ப விஷயங்களை அரசியலாக்குவது சரியல்ல என்றும் தெரிவித்தார்.