ஆட்குறைப்பு அரசாணை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்

ஆட்குறைப்பு அரசாணை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஒருநாள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் நிரந்தர செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து தங்களது பணிகளை மேற்கொண்டனர்.

செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில், தேவையான புதிய பணியிடங்களை உருவாக்காமல், தற்போது பணியில் உள்ள செவிலியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் வகையில் அரசாணைகள் பிறப்பிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

மேலும், அரசின் உத்தரவின்படி பல மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து செவிலியர்களை பிற மருத்துவமனைகளுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

எனவே, ஆட்குறைப்பு தொடர்பான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும், மக்கள் தொகை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒருநாள் கருப்பு பட்டை அணியும் அடையாளப் போராட்டம் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.