கொடியங்குளத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

கொடியங்குளத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கொடியங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டப்பிடாரம் தாலுகா கொடியங்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கல்குவாரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் கிராம மக்கள் கல்குவாரி அமைக்கக் கூடாது என தங்களது எதிர்ப்பை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கொடியங்குளம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொடியங்குளம் பகுதியில் கல்குவாரி அமைக்கப்பட்டால், அதைச் சுற்றியுள்ள சுமார் 20 கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கல்குவாரிக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செயல்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். கல்குவாரி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கல்குவாரி அமைக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு அனுமதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொடியங்குளம் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.