பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு: அஞ்சல்துறை அழைப்பு!

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு: அஞ்சல்துறை அழைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய அஞ்சல் சேமிப்பு கணக்குகள் தொடங்க அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது. 

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சு.முனிகிருஷ்ணன் கூறியதாவது: இந்திய அஞ்சல்துறை மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய அஞ்சல் சேமிப்பு கணக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி,  பத்து வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்குகள், பூஜ்ஜிய இருப்புத் தொகை (Zero Balance Account) வசதியுடன் தொடங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.  பத்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) கணக்குகள், பூஜ்ஜிய இருப்பு கணக்கு (Zero Balance Account) வசதியுடன் தொடங்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ மாணவிகள் அரசு உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வழங்கப்படும் இதர பயன்கள் திட்ட உதவித்தொகையும் அஞ்சல் சேமிப்பு கணக்குகள்/ இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) கணக்குகள் மூலம் பெற்று பயன்பெறலாம். இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சு.முனிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.