திருச்செந்தூர் கடலில் ஜெல்லி மீன்கள் அதிகரிப்பு : பக்தர்கள் குளிக்க தடை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் ஜெல்லி மீன்கள் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன. கடலில் நீராடும் பக்தர்களை கடிப்பதாலோ அல்லது தொடுவதாலோ அலர்ஜி ஏற்பட்டு ஊறல் ஏற்படுகிறது. சில பக்தர்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்
இந்நிலையில், கடற்கரை பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் கோவில் கடற்கரையில் ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் கூறும்போது, இந்த வகை ஜெல்லி மீன்களால் பக்தர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் கோயில் கடலில் ஜெல்லி மீன்கள் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் பக்தர்கள் கால்களை மட்டும் நனைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.