ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மதிய உணவு அரிசி மூட்டையில் எலி கழிவு? தாசில்தார் திடீர் ஆய்வில் பரபரப்பு... உடனடி எச்சரிக்கை..!

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மதிய உணவு அரிசி மூட்டையில் எலி கழிவு? தாசில்தார் திடீர் ஆய்வில் பரபரப்பு... உடனடி எச்சரிக்கை..!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே தருவைக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தூய கேத்தரின் மகளிர் பள்ளியில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் அய்யனார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 180 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளியின் சமையலறையை ஆய்வு செய்த தாசில்தார், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை பார்வையிட்டார். அப்போது, அரிசி மூட்டையில் எலி கழிவு இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறையில் சேமித்து பராமரிக்க வேண்டும் என்று தாசில்தார் அறிவுறுத்தினார்.

மேலும், இதுபோன்ற நிலையில் உள்ள உணவுப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்த அவர், அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற அலட்சியம் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும், மாணவர்களின் உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமையல் பணியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கு தாசில்தார் அய்யனார் எச்சரிக்கை விடுத்தார்....