தூத்துக்குடி துறைமுகம் ஸ்தம்பிப்பு... ஸ்கேனிங் இயந்திரம் பழுதால் நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசை!

தூத்துக்குடி துறைமுகம் ஸ்தம்பிப்பு... ஸ்கேனிங் இயந்திரம் பழுதால் நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசை!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 'கிரீன் கேட்' சரக்கு பெட்டக ஸ்கேனிங் இயந்திரத்தில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சரக்கு பரிசோதனைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள், துறைமுக வளாகத்திலும், மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இணைப்புச் சாலைகளிலும் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

இந்த தாமதத்தால் லாரி ஓட்டுநர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுவதுடன், ஏற்றுமதியாளர்கள் சரக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் கப்பல்களுக்கு அனுப்ப முடியாமல் வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், ஊழியர்கள் பற்றாக்குறையும் இந்த நிலைக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறை உடனடியாகச் சரிசெய்து, நிலைமையை சீராக்க துறைமுக நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.