நடுரோட்டில் படுத்திருந்த போதை ஆசாமி... அரசுப் பேருந்து மீது செங்கல் வீச்சு! கதவு, ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின!

நடுரோட்டில் படுத்திருந்த போதை ஆசாமி... அரசுப் பேருந்து மீது செங்கல் வீச்சு! கதவு, ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே, மதுபோதையில் சாலையின் நடுவே படுத்திருந்த நபர் அரசுப் பேருந்து மீது செங்கல் வீசி தாக்கியதில், பேருந்தின் கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து அரசுச் சொத்துகள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து நேற்று மாலை உழக்குடியில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மாலை 5.45 மணியளவில் பாறைக்காடு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அகரம் வடவூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த முத்துப்பட்டன் (42) என்பவர் மதுபோதையில் சாலையின் நடுவே படுத்திருந்ததாக கூறப்படுகிறது.

அவர் மீது பேருந்து மோதிவிடக் கூடாது என்பதற்காக, ஓட்டுநர் முருகேசன் பேருந்தை மெதுவாக சாலையின் ஓரமாக இயக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென எழுந்த முத்துப்பட்டன், அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து பேருந்தின் இடதுபுற பின்பக்கக் கதவு மற்றும் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகளை நோக்கி வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பேருந்தின் பின்பக்கக் கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து அரசுச் சொத்துகள் சேதமடைந்தன.

ஓட்டுநர் முருகேசன் அளித்த புகாரின் பேரில், முறப்பநாடு போலீசார் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முத்துப்பட்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.