விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் துர்நாற்ற அவலம்... பராமரிப்பின்றி சீரழியும் நவீன கழிப்பிடம் – நோய் பரவும் அபாயம் என பொதுமக்கள் வேதனை

விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் துர்நாற்ற அவலம்... பராமரிப்பின்றி சீரழியும் நவீன கழிப்பிடம் – நோய் பரவும் அபாயம் என பொதுமக்கள் வேதனை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள நவீன பொதுக்கழிப்பிடம் முறையான பராமரிப்பின்றி சீரழிந்து கிடப்பதால், பேருந்து நிலையம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத் தேவைகளுக்காக நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சில ஆண்டுகளுக்கு முன்பு JSW நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பு நிதியின் மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுக்கழிப்பிடத்தை அமைத்துக் கொடுத்தது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட இந்த கழிப்பிடம், கடந்த சில மாதங்களாக முறையான பராமரிப்பின்றி அலட்சியமாக உள்ளதாக கூறப்படுகிறது. கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகரித்து, டெங்கு மற்றும் மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பேருந்து நிலையம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் மற்றும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், போதிய கண்காணிப்பு இல்லாததால் சில சமூக விரோதிகள் கழிப்பிட அறைகளில் ஆபாச வாசகங்கள் எழுதுவது மற்றும் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தனியார் நிறுவனம் சமூகப் பொறுப்புடன் கட்டிக் கொடுத்த நவீன கழிப்பிடத்தைக் கூட முறையாகப் பராமரிக்க முடியாமல் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும் பேரூராட்சி அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிப்பிடத்தை சீரமைத்து தினசரி பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.