தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அரிய சாதனை பிறவியிலேயே கண் இல்லாமல் பிறந்த 9 வயது சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி வெற்றிகரமான அறுவை சிகிச்சை

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அரிய சாதனை பிறவியிலேயே கண் இல்லாமல் பிறந்த 9 வயது சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி வெற்றிகரமான அறுவை சிகிச்சை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறவியிலேயே இடது கண் இல்லாமல் பிறந்த 9 வயது சிறுமிக்கு அரிதான கண் குழி சீரமைப்பு மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவில் துறைத் தலைவர் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இணைந்து சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதந்தோறும் 200-க்கும் மேற்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுடன், கண் நீர் அழுத்த நோய், மாறுகண், கருவிழி மாற்று மற்றும் கண் குழி சீரமைப்பு உள்ளிட்ட நவீன சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பொன்னுவின் மகள் முத்துசெல்வி (9), பிறவியிலேயே இடது கண் இல்லாமல் பிறந்துள்ளார். மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் டாக்டர் கலைவாணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாபன் மற்றும் இருப்பிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெயமணி ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில், கடந்த ஜூன் 20-ஆம் தேதி சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, கண் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளருமான டாக்டர் ரீட்டா ஹெப்சிராணி தலைமையில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருணாதேவி, மயக்கவியல் மருத்துவர் டாக்டர் ஸ்ரீராம், மருத்துவர்கள் டாக்டர் அஜய் சந்தோஷ் டேவிட், டாக்டர் ஜெயந்தி, டாக்டர் வின்சா, டாக்டர் திவ்யா, செவிலியர்கள் சுரேகா, ரத்னா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் இணைந்து கண் குழி சீரமைப்பு மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவக் குழுவினர் கூறுகையில், "பிறவியிலேயே கண் இல்லாமல் பிறந்தவருக்கு பார்வையை மீட்டெடுப்பது மருத்துவ ரீதியாக சாத்தியமில்லை. இருப்பினும், இந்த நவீன சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம், சிறுமியின் முகத் தோற்றம் இயல்பாக காணப்படும் வகையில் செயற்கை கண் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பிறவிக்குறைபாடு வெளிப்படையாக தெரியாமல், சமூகத்தில் தாழ்வு மனப்பான்மை ஏற்படாமல் நம்பிக்கையுடன் வாழ உதவியாக இருக்கும்" என்றனர்.

இந்த அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாராட்டினர்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பல்வேறு நவீன சிகிச்சைகள் திறம்பட வழங்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் தங்களது உடல்நலக் குறைகளுக்கு அரசு மருத்துவமனைகளை அணுகி பயன்பெற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.