தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு : எஸ்பி தகவல்!
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆண்கள், 3 பெண்கள் என 28 ஊர்க்காவல் படை பணியிடங்களையும், 7 (ஆண்கள் மட்டும்) மீனவ இளைஞர் ஊர்க்காவல் படை பணியிடங்களையும் நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்க்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். இத்தேர்வு வருகிற 02.12.2024 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கவாத்து மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
மேற்படி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் படிப்பு சான்றிதழ், வயது நிரூபணத்திற்கான சான்றிதழ், வேலை/தொழில் விபரத்துடன் கூடிய சுயவிபர குறிப்பு (Bio - Data), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2), அசல் சான்றிதழ் மற்றும் நகலுடன் வர வேண்டும் என்றும், மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிப்பவர்களாக இருப்பின் மீனவ இளைஞர் என்பதற்கான அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.