தூத்துக்குடியில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் ரூ.50 லட்சம் பணம் பறிப்பு - 3பேர் கைது!

தூத்துக்குடியில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் ரூ.50 லட்சம் பணம் பறிப்பு - 3பேர் கைது!

தூத்துக்குடியில் சிபிஐ அதிகாரி என்று கூறி டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் ரூ.50 லட்சம் பணம் பறித்த 3 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு மர்ம நபர்கள் WhatsApp காலில் தொடர்பு கொண்டு தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி மேற்படி மூதாட்டியிடம் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி கணக்கு உள்ளதாகவும் அதில் மனிதகடத்தல் வழக்கில் ரூபாய் இரண்டு கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளனர், மேலும் மேற்படி மூதாட்டியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மேற்படி சிபிஐ அதிகாரிகளாக பேசிய நபர்கள் மனிதகடத்தல் வழக்கில் மூதாட்டியை கைது செய்யாமல் இருக்க 50 லட்சம் பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மேற்படி மூதாட்டி ரூபாய் 50 லட்சம் பணத்தை கூறிய வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி மூதாட்டி இதுகுறித்து NCRP ல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் மேற்படி வங்கி கணக்கு மற்றும் வங்கி கணக்குடன் தொடர்புடைய பணப் பரிமாற்றங்களை ஆராய்ந்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் ஆந்திரபிரதேசம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ராமு மகன் பள்ளி பரமேஸ்வரராவ் (28), ஆந்திரபிரதேசம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர்களான சங்கர் ராவ் மகன் சுகந்திபதி சந்திரசேகர் (40) மற்றும் ஜெகன்மோகன் ராவ் மகன் ஆடும்சுமில்லி சிவராம் பிரசாத் (43) ஆகியோர் என்பதும் மேற்படி வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்ததும், மேற்படி மூதாடியிடம் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் பள்ளி பரமேஸ்வரராவ், சகந்திபதி சந்திரசேகர் மற்றும் ஆடும்சுமில்லி சிவராம் பிரசாத் ஆகியோரை ஆந்திரபிரதேசம் சென்று கைது செய்து நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் மேற்படி மோசடி நபர்களிடம் இருந்து மொத்தம் 6 செல்போன்கள் ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு அட்டைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று சிபிஜ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி நடைபெற்றுவருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை உடனடியாக துண்டித்துவிடவும், மேலும் சைபர் குற்ற புகார்களுக்கு உடனடியாக புகார் எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.