செங்கல்பட்டு கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளரை பதவி நீக்கம் செய்ய கோரி தூத்துக்குடியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக நேற்று மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் அ.இளமாறன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வே.அக்னிமுத்துராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் வி.அந்தோணிபட்டுராஜ் முன்னிலை வகித்தனர்.
கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் அ.சாம் டேனியல் ராஜ் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். அவரது உரையில் செங்கல்பட்டு துணைப்பதிவாளர் (வீட்டுவசதி)யாக பணிபுரியும் செல்வி மு.உமாதேவி ஊழியர்களை தரக்குறைவாக பேசி, ஊழியர் விரோதப்போக்கை கையாண்டு, அவர்களை பணிக்கு வரவிடாமல் மிரட்டி வருவதாகவும், தனது உயர் அலுவலர்களை இழிவாக பேசி அவர்களது ஆணைகளை செயல்படுத்தாமல், நிர்வாக பணிகளை முடக்கி வருகிறார். இவர் பணியில் சேர்ந்த 2019ஆம் ஆண்டு இவர் முதன்முதலில் மயிலாடுதுறை கூட்டுறவு நகர வங்கியில் மேலாண்மை இயக்குநர் பணியில் சேர்ந்தார். அவர் பணிபுரிந்த அனைத்து பணியிடங்களிலும் பணியாளர்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும். பொதுமக்களுக்கும், பல பிரச்சனைகளை ஏற்படுத்தி பல நிர்வாக சிக்கலை ஏற்படுத்தியதன் காரணமாக, இவர் பணியில் சேர்ந்து ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இவர் மீது ஆறு ஒழுங்கு நடவடிக்கைகள் நிறுவையில் உள்ளதால் தற்போது வரை பணிவரன்முறை செய்யப்படாமலேயே உள்ளார்.
இவர் கட்டுப்பாட்டில் உள்ள வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களில் தற்போது செயலாட்சியர் பணி நியமனம் நடைபெறாதநால் சங்கங்களின் நிர்வாக பணிகளில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர் தனது உயர் அதிகாரிகள் மீதும் பல புகார்களை அரசுக்கு தெரிவித்துள்ளதால், இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள உயர் அலுவலர்கள் தயங்கி வருகின்றனர். 04.03.2023ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில், இவர் மீது நடவடிக்கை எடுக்க அறைக்கூவல் தீர்மானம் இயற்றப்பட்டு, அரசு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது கூட்டுறவுத்துறை செயலாளர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் மு.உமாதேவி துணைப்பதிவாளர் மீது நடவடிக்கை மேற்கொண்டு ஆணை பிறப்பித்த நிலையில் அரசாணை வெளியாகாமல், தனது செல்வாக்கை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் இவர் பணியில் தொடரும்பட்சத்தில் அரசுக்கும் கூட்டுறவு துறைக்கும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் செல்வி மு. உமாதேவியை பணிநீக்கம் செய்ய தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணை தலைவர் மகேந்திர பிரபு, வட்டத் தலைவர் கணேசன், ஓட்டப்பிடாரம் வட்ட செயலாளர் திருமாலை ஆகியோர் பேசினர் . தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜெ.லௗன்மிக்கேல்தளபதி நன்றி கூறினார்.