இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60லட்சம் பீடி இலை பறிமுதல் : சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்..!
 
                                தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட உள்ளதாக கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் காவலர்கள் பழனி பாலமுருகன், கேப்ரியல், பேச்சி ராஜா ஆகியோர் புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புல்லா வெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றபோது, ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை விரட்டிச் சென்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடத்தூர் விலக்கு அருகே மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சுமார் 30 கிலோ வீதம் 60 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வாகனத்தின் ஓட்டுநரான முள்ளக்காடு காந்திநகர் அய்யம்பாண்டி மகன் மதியழகன் (39), மற்றும் முத்தையாபுரம் பொட்டல் காடு செல்வம் மகன் முருக பிரசாத் (22) ஆகிய 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டுள்ள பீடி இலை மூட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.60 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.
 
                         
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
