தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை அணிகள் வெற்றி
 
                                தூத்துக்குடியில் அகில இந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே நேற்று நடந்த கூடைப்பந்து போட்டியில் சென்னை அணிகள் வெற்றி பெற்றன.
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம், வ.உ.சி. துறைமுக ஆணையம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 15-வது அகில இந்திய அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 6 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்று உள்ளன. இந்த போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.
2-வது நாளான நேற்று மாலை பெண்களுக்கான போட்டி நடந்தது. இதில் சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரி அணியும், கேரளா செயின்ட் அல்போன்சா கல்லூரி அணியும் விளையாடின. இதில் சென்னை அணி 55-48 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடந்த ஆண்களுக்கான போட்டியில் சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணியும், கேரளா செயிண்ட் ஆல்பர்ட் கல்லூரி அணியும் விளையாடின. இதில் சென்னை அணி 70-50 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டிகளை தொழில் அதிபர்கள் சித்ராசுந்தர், பெரியசேகர், வ.உ.சி. துறைமுக ஆணைய டிரஸ்டி சத்யநாராயணன், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
 
                         
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
