தூத்துக்குடியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வழியிறுத்தி சாலை மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது..!

தூத்துக்குடியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வழியிறுத்தி சாலை மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது..!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.. அதாவது, கோரிக்கைகளான, தமிழக முதல்வர் 2021 தேர்தல் கால வாக்குறுதியான வரிசை எண் 313 ல் அறிவித்தபடி சத்துண ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக அமைப்பாளருக்கு 5 லட்சமும் சமையல் உதவியாளருக்கு 3 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளாகும். 

அதன்படி, தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்பு தூத்துக்குடியில் உள்ள 12 ஒன்றியத்தில் இருந்து கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் சுமார் ஆயிரம் பேர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்பில் இருந்து அருகே உள்ள அம்பேத்கர் சிலை ஊர்வலமாக நடந்து சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் ஆனந்த செல்வம், அன்னம்மாள், வேல்முருகன், இணைச் செயலாளர்கள் பாஸ்கர், பிளாரன்ஸ் முத்துமணி, மோகனா, விஜயராணி, பொன்னரசி, செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தே.முருகன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயபாக்கியம் போராட்டம் விளக்கி பேசினார். 

போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை குண்டுகட்டாக தூத்துக்குடி மத்தியபாக காவல் ஆய்வாளர் மோகனா ஐயர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்..

உணவு, பேருந்து தாமதம்..

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து செல்ல வாகனம் இல்லாமல் சுமார் ஒரு மணி நேரமாக கொளுத்தும் வெயிலில் சாலையில் சத்துணவு ஊழியர்கள் காத்திருந்தனர். 

பின்னர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட பெண்களுக்கு மாலை 4 மணி வரை உணவு வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் மண்டபத்தில் உள்ளிருந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் 4.30 மணியளவில் உணவு வழங்கப்பட்டது.