சாயர்புரம் குடிநீர் திட்டத்தில் முறைகேடு? – மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் மனு

சாயர்புரம் குடிநீர் திட்டத்தில் முறைகேடு? – மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் மனு

தூத்துக்குடி: சாயர்புரம் பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வீட்டு குடிநீர் இணைப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், தோண்டப்பட்ட சாலைகள் தரமற்ற முறையில் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாயர்புரம் கிளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாயர்புரம் நகர செயலாளர் சுவாமிதாஸ் மனுவை வழங்கினார்.

மனுவில், வீட்டு குடிநீர் இணைப்புக்காக விண்ணப்பதாரர்களிடம் அரசு நிர்ணயித்த ₹8,100 டெபாசிட் மற்றும் சாலை தோண்டுதல் தொடர்பான கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக ₹4,000 முதல் ₹6,000 வரை எந்தவித அதிகாரப்பூர்வ ரசீதும் வழங்காமல் ஒப்பந்ததாரர்கள் கட்டாயமாக வசூலித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி வழங்கவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் பெரும்பாலான பகுதிகளில் பழைய நிலைக்கு சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025–26ஆம் ஆண்டில் பேரூராட்சி பொது நிதியில் வார்டு 15 நேரு தெரு, வார்டு 13 கோவில் தெரு, வார்டு 14 புதுத்தெரு, வார்டு 12 ஆண்டாள் தெரு மற்றும் வார்டுகள் 2, 3 ஆகிய பகுதிகளில் சாலை பழுதுபார்க்க ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும், அவை பெயரளவிலேயே செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சுந்தரராஜ் நகர் பிரதான சாலை இன்னும் சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும், இதுகுறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குடிநீர் குழாய் பராமரிப்பு போன்ற தொழில்நுட்ப பணிகளில் தகுதியற்ற பணியாளர்களை ஈடுபடுத்தாமல், ஐ.டி.ஐ. பயிற்சி பெற்ற தகுதியான பிளம்பர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும், சுந்தரராஜ் நகரில் 2007–08ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பாழடைந்து, தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும், அதை இடிப்பதற்குப் பதிலாக புதுப்பித்து பேரூராட்சி அலுவலக பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்