தூத்துக்குடி பூபால்ராயர்புரம் மீன் சந்தை சர்ச்சை: ₹54 லட்சம் கட்டிடம் திறந்து வைத்தும் இன்னும் பூட்டு

தூத்துக்குடி பூபால்ராயர்புரம் மீன் சந்தை சர்ச்சை: ₹54 லட்சம் கட்டிடம் திறந்து வைத்தும் இன்னும் பூட்டு

???? ₹54 லட்சத்தில் கட்டிய புதிய மீன் சந்தை… திறந்து வைத்தும் பூட்டு!  

அமைச்சர் – எம்பி – மேயர் திறப்பு விழா நடந்தும் 2 மாதமாக பூட்டே…  

பழைய சேதமான கட்டிடத்தில் உயிர் அச்சத்தில் வியாபாரம் – பூபால்ராயர்புரம் மீன் வியாபாரிகள் வேதனை

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பூபால்ராயர்புரம் பகுதியில் “நமக்கு நாமே திட்டத்தின்” கீழ் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய மீன் விற்பனை கூடம் கட்டப்பட்டது.

இந்த புதிய கட்டிடத்தை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடந்த 09.01.2026 அன்று திறந்து வைத்தார்.

ஆனால் திறப்பு விழா நடைபெற்றது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டும், அந்த மீன் விற்பனை கூடம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டு போட்டு வைக்கப்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அந்த கட்டிடத்தின் முன்பு கம்பு கட்டி மறித்து வைக்கப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்த “மீன் விற்பனை கூடம்” என்ற போர்டு கூட கிழிந்து தொங்கும் நிலையில் உள்ளது. திறப்பு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்காரங்கள் மங்கிய நிலையில் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய கட்டிடம் இருந்தும் அதில் வியாபாரம் செய்ய முடியாததால், அதன் அருகே ஷீட் போடப்பட்ட பழைய சேதமான கட்டிடத்திலேயே மீன் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த பழைய கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்தில் தினமும் வியாபாரம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

புதிய கட்டிடத்தில் சுமார் 28 கடைகள் அமைக்கப்பட்டு மீன் வியாபாரம் செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் இரண்டு மாதங்கள் கடந்தும் அந்த கட்டிடம் திறக்கப்படாததால் வியாபாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக மீன் வியாபாரம் செய்து வரும் லில்லி என்ற பெண் வியாபாரி கூறுகையில், “நான் பூபால்ராயபுரம் மார்க்கெட்டில் 48 வருடமாக மீன் வியாபாரம் செய்து வருகிறேன். தற்போது நாங்கள் வியாபாரம் செய்யும் பழைய கட்டிடம் மிகவும் சேதமடைந்து கீழே எல்லாம் உடைந்து கிடக்கிறது. எப்போது இடிந்து விழும் என்ற பயத்தில் தான் வியாபாரம் செய்கிறோம்.

புதிய கட்டிடத்தை கட்டி கொடுத்ததற்கு நன்றி. ஆனால் அதை சீக்கிரம் திறந்து கொடுத்தால் தான் எங்களுக்கு நன்றாக இருக்கும். வெயிலில் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள். படிகளில் பாசி பிடித்து வழுக்கி விழும் நிலையும் உள்ளது. ஒரு மாதத்தில் திறந்து விடுவோம் என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் திறக்கவில்லை. சீக்கிரம் கடைகளை திறந்து கொடுத்தால் நாங்கள் உள்ளே போய் வியாபாரம் செய்ய முடியும்” என்றார்.

மேலும் மற்றொரு மீன் வியாபாரி கூறுகையில், “பூபால்ராயர்புரம் புதிய மீன் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் வியாபாரத்துக்கு திறந்து விடவில்லை. உள்ளே உள்ள ஷீட் போடப்பட்ட கூடாரத்தில் இடமில்லாத காரணத்தினால் வெயிலில் நின்று மீன் விற்க வேண்டிய நிலை உள்ளது. குடைகள் வைத்து தான் வியாபாரம் செய்கிறோம்.

சாலையோரத்தில் வியாபாரம் செய்வதால் போக்குவரத்துக்கும் கடும் சிக்கல் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்லும் சாலை அருகே மக்கள் அமர்ந்து வியாபாரம் செய்வதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து நடக்கலாம். அதனால் அதிகாரிகள் உடனடியாக இந்த புதிய மீன் சந்தையை திறந்து கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

₹54 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய மீன் சந்தை திறந்து வைக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டே போட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், “திறப்பு விழா நடத்துவதற்காக மட்டுமா இந்த கட்டிடம்?” என்ற கேள்வி பூபால்ராயர்புரம் மக்களிடையே எழுந்துள்ளது.

மேலும் தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் காட்சிக்காக மட்டும் திறந்து வைக்கப்படுகிறதா என்ற அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதனால் “இந்த புதிய மீன் சந்தை எப்போது திறக்கப்படும்?” என்ற கேள்வி தற்போது தூத்துக்குடி மாநகராட்சியை நோக்கி எழுந்துள்ளது.