தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் இறந்த ஓய்வூதியர்களின் பெயரில் ₹4.51 கோடி மோசடி... ஓய்வூதிய மோசடி வழக்கில் 7 பேர் சிக்கினர்!

தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் இறந்த ஓய்வூதியர்களின் பெயரில் ₹4.51 கோடி மோசடி... ஓய்வூதிய மோசடி வழக்கில் 7 பேர் சிக்கினர்!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் ஓய்வூதிய நிதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.4 கோடியே 51 லட்சம் மதிப்பிலான பெரும் மோசடி தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 7 பேர் மீது மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் ஓய்வூதிய நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இதையடுத்து துறைமுகத்தின் கணக்கு மற்றும் மின்னணு தரவு பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

விசாரணையில், துறைமுகத்தின் ஓய்வூதியர் பிரிவில் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றி வந்த கிஷோர் பாபு மற்றும் மணிகண்டன் பிரபு ஆகியோர், சில அதிகாரிகளின் உதவியுடன் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

துறைமுகத்தில் பணியாற்றி பின்னர் உயிரிழந்த 27 ஓய்வூதியதாரர்களின் விவரங்களை கணினி தரவுத்தளத்தில் இருந்து எடுத்துக் கொண்டு, அவர்களது வங்கி கணக்கு விவரங்கள் மாற்றப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அசல் கணக்கு எண்களுக்கு பதிலாக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்கு எண்கள் பதிவேற்றப்பட்டு, இறந்த ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகைகள் அந்த கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த முறைகேட்டின் மூலம் சுமார் ரூ.4.51 கோடி வரை சட்டவிரோதமாக கையாடல் செய்யப்பட்டிருப்பது தணிக்கை மற்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த முறைகேடு நடைபெற அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் கோப்புகள் முறையாக சரிபார்க்கப்படாமல் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், சில அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, துறைமுக முதுநிலை கணக்கு அதிகாரி அனுராதா, கணக்கு அலுவலர் (நிலை-2) பழனி குமாரசுவாமி, மின்னணு தரவு செயலாக்க அலுவலர் ரோஜர்ஸ் ஜோசப் துரைராஜா, மின்னணு தரவு செயலாக்கத் துறை உதவி இயக்குநர் காளியப்பன், முதுநிலை உதவியாளர் சந்தனசங்கர், அவுட்சோர்சிங் ஊழியர்கள் மணிகண்டன் பிரபு மற்றும் கிஷோர் பாபு ஆகிய 7 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மதுரை சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த பல கோடி ரூபாய் நிதி மோசடி சம்பவம், மாவட்டம் முழுவதும் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.