எட்டயபுரம் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதல் – அரசு போக்குவரத்து தற்காலிக நடத்துனர் உயிரிழப்பு

எட்டயபுரம் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதல் – அரசு போக்குவரத்து தற்காலிக நடத்துனர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ஏற்பட்ட கோர சாலை விபத்தில் அரசு போக்குவரத்து கழக தற்காலிக நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளாத்திகுளம் காமராஜ் நகரைச் சேர்ந்த ரமேஷ்குமார் மகன் பிரதீப் குமார் (32) அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் உறவினர் ஒருவர் காலமான நிலையில், துக்கம் விசாரிக்க சென்னையில் இருந்து எட்டயபுரத்திற்கு வந்திருந்த உறவினர்களை அழைத்து வருவதற்காக தனது காரில் விளாத்திகுளத்திலிருந்து புறப்பட்டார்.

எட்டயபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி திரும்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த பள்ளத்தில் இரண்டு முறை உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் பிரதீப் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.