கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற மனைவி வழக்கில் இளஞ்சிறார் உட்பட 2 பேர் கைது!

விளாத்திகுளம் அருகே கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற மனைவி வழக்கில் தேடப்பட்டு வந்த ஒரு இளஞ்சிறார் உட்பட இரண்டு பேரை சங்கரலிங்கபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற மனைவி வழக்கில் இளஞ்சிறார் உட்பட 2 பேர் கைது!

விளாத்திகுளம் அருகே கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற மனைவி வழக்கில் தேடப்பட்டு வந்த ஒரு இளஞ்சிறார் உட்பட இரண்டு பேரை சங்கரலிங்கபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்து நாகலாபுரம் அருகே கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி அழகு சுந்தரபாண்டி (32). இவரும் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த புனித ஆனி எப்சிபா (29) என்பவரும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்கள் சின்னவ நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் அழகுசுந்தரபாண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலையை முடித்து விட்டு தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கரலிங்கபுரம் விலக்குப் பகுதியில் அருகே வந்தபோது, அவரது கிராமத்தைச் சேர்ந்த மாரிராஜ் (31) என்பவர் மற்றொரு பைக்கில் வந்துள்ளார். மாாிராஜ் தனது பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அழகு சுந்தரபாண்டியும் அவருடன் பேசிக்கொண்டே வந்துள்ளார். மாரிராஜ் திடீரென தனது பைக்கை நிறுத்தியுள்ளாா். இதனால் அழகுசுந்தரபாண்டி மட்டும் தனியாக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அழகு சுந்தரபாண்டி சல்லிசெட்டிபட்டி அருகே சென்றபோது, 2 மர்ம நபர்கள் பைக்கில் பின் தொடா்ந்து அரிவாளை வைத்து அவரை தாக்க முயன்றுள்ளனர்.இதில் அழகு சுந்தரபாண்டி அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் அவர்களிடமிருந்து உயிா் தப்பித்து பைக்கில் வேகமாக தனது கிராமத்திற்கு சென்றுள்ளாா். கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அழகுசுந்தர பாண்டியை கிராம மக்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அழகு சுந்தரபாண்டி சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இதுதொடர்பாக சங்கரலிங்கபுரம் போலீஸார் வழக்குபதிந்து நடத்திய விசாரணையில், அழகுசுந்தரபாண்டியின் மனைவி புனித ஆனி எப்சிபாவுக்கும், மாாிராஜிக்கும் (31) பழக்கம் இருந்துள்ளது. மேலும் அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து பழகியதாக கூறப்படுகிறது. இதற்கு இடையூறாக இருக்கும் அழகு சுந்தரபாண்டியை கொலை செய்ய முடிவெடுத்த புனிதஆனி எப்சிபாவும் மாாிராஜூம் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த 2 பேரிடம் அழகு சுந்தரபாண்டியை கொலை செய்ய ரூ.3.40 லட்சம் பேசியுள்ளனர். 

இதில் ரூ.1.20 லட்சம் முன்பணமாக பெற்று புதிய பைக்  வாங்கி அழகு சுந்தரபாண்டியை கொலை செய்வதற்கு செல்வதற்கு இந்த பைக்கை பயன்படுத்தி உள்ளனா் என்பது தொியவந்தது. இதையடுத்து போலீஸார் மாரிராஜ், புனித ஆனி எப்சிபா மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த கவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன் (19) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புனித ஆனி எப்சிபா திருநெல்வேலி கொக்கிரகுளம் சிறையிலும், மாரிராஜ், சரவணன் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை சங்கரலிங்கபுரம் போலீஸார் தேடி வந்த நிலையில் நாகலாபுரம் பஜார் பகுதியில் சந்தேகிக்கும்படி சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சங்கரலிங்கபுரம் போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற அஜித் (19), அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற கார்த்திக் (17) என்பதும்  இருவரும் அழகு சுந்தரபாண்டியை கொலை செய்ய முயற்சித்த நபர்கள் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் சங்கரலிங்கபுரம் போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தனர்.