தூத்துக்குடி நகரம் 25 ஆண்டுகளுக்கான அடிப்படை கட்டமைப்புடன் உருவாக்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி நகரம் 25 ஆண்டுகளுக்கான அடிப்படை கட்டமைப்புடன் உருவாக்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சியின் ஒருங்கிணைந்த நகர வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில், மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து விரிவான கலந்தாய்வு கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் திருமதி பிரியங்கா இ.ஆ.ப. மற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகள், பொறியாளர்கள், திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் 

சில ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் அப்போது துறை செயலாளராக இருந்த சிவதாஸ் மேனன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற பயிற்சியில் மாநகராட்சியின் பங்கு, ஆணையரின் பொறுப்பு, கன்சல்டன்ட்களின் பணி, நகர வளர்ச்சிக்கான நிதி திரட்டும் முறைகள் ஆகியவை தெளிவுபடுத்தப்பட்டது.

அந்த பயிற்சியின் அடிப்படையிலேயே நகர வளர்ச்சிக்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு , தற்போதைய பட்ஜெட்டில் 45 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களையே அறிவிக்கப்பட்டுள்ளது , பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திட்டமிடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் .

25 ஆண்டுகளுக்கு முன் குறைந்த வாகனங்கள் இருந்த நிலையில், இன்று ஒவ்வொரு வீட்டிலும் 2–3 வாகனங்கள் இருப்பதால் சாலை அகலப்படுத்தல் அவசியமானதாகியுள்ளது. முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட்டதால், முன்பு காலை 8 முதல் 9 மணி வரை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் தற்போது குறைந்துள்ளது.

தூத்துக்குடி நகரில் 28 கிலோமீட்டர் நீளமான தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. அவற்றின் பராமரிப்பு குறித்த பிரச்சினைகள் எழுந்ததால், தேவையானால் மாநகராட்சியே பராமரிப்பை ஏற்கத் தயாராக இருக்கிறது , இதற்கான அரசாணை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தேவையற்ற இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைப்பதைத் தவிர்த்து, ரவுண்டானா முறையில் போக்குவரத்து ஓட்டத்தை சீராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஏற்கனவே சில இடங்களில் ராம்ப் பாலங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

ரயில் போக்குவரத்து அதிகரித்து வருவதால் முதல் கேட் மற்றும் இரண்டாம் கேட் பகுதியில் அடிப்பாலம் அமைப்பது அவசியமாகியுள்ளது. பாலம் அமைக்கப்பட்டால் நகர போக்குவரத்து சீராகும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2019 முதல் 2023 வரை அதிக மழை பதிவாகியுள்ளது. 10 சென்டிமீட்டர் வரை மழை பெய்தாலும் 1–2 மணி நேரத்தில் நீர் வடிகட்டும் வகையில் வடிகால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடிப்படை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பக்கிள் ஓடை 25 கிலோமீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை அமைப்பை மாற்றாமல், வெள்ளநீர் ஓட்டத்திற்கு வழிவகுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதன் மேல் பகுதிகளில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

575 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரில் சேகரிக்கப்படும் கழிவுகளை தொழிற்சாலைகளுக்கு மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் “குப்பை இல்லா நகரம்” என்ற இலக்குடன் செயல்படப்படுகிறது.

WGC சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பாரம்பரிய சாலைகளில் மின்கம்பங்களை அகற்றி, சாலைகளை அழகுபடுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பங்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு, நடைப்பாதையில் கம்பங்கள் இல்லாத நகர வடிவமைப்பு அமல்படுத்தப்படும் .

நகரில் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு பார்க்கிங் வசதி கட்டாயமாக்கப்பட்டு. சாலையில் ஆக்ரமிப்பு, போஸ்டர் ஒட்டுதல், அனுமதியில்லா கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பேருந்து நிலையம், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய சாலைகளை இணைக்கும் 10 சாலை இணைப்பு திட்டம் பரிசீலனையில் உள்ளது. கடற்கரை சாலை பாரம்பரிய வடிவில் மேம்படுத்தப்படும்.

சுண்ணாம்பு அரைக்கும் சிறு தொழில்கள் மற்றும் புகை வெளியீடு குறித்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதைத் தீர்க்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தூத்துக்குடி நகரம் எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான, சுத்தமான, போக்குவரத்து சீரான, சுற்றுச்சூழல் நட்பு கொண்ட ஸ்மார்ட் நகரமாக உருவாக்க வேண்டும்.

“எங்கள் காலகட்டத்தில் தூத்துக்குடி நகருக்கு இந்த மாற்றத்தை கொண்டு வந்தோம் என்று அடுத்த தலைமுறை பெருமையாக சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும்” என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்..