தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழா ஜூலை 26ஆம் தேதி தொடக்கம் : பேராலய அதிபர் பேட்டி!

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழா ஜூலை  26ஆம் தேதி தொடக்கம் : பேராலய அதிபர் பேட்டி!

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 443ஆம் ஆண்டு திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆக.5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இது தொடர்பாக பேரலாய அதிபர் பங்குதந்தை ஸ்டார்வின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாநகரின் அடையாளமாகவும், தமிழ்நாட்டில் திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட 10 பேராலயங்களுள் ஒன்றாகவும் திகழும் பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் 443-ஆம் ஆண்டுப் பெருவிழாவானது ஜூலை 26 சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 05 செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது.

ஜூலை 26ஆம் தேதி ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி இவ்விழாவினைத் தொடங்கி வைக்க இருக்கிறார். கொடியேற்ற விழாவில் ஆயர்கள், குருக்கள், இறைமக்களோடு இணைந்து அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். பெருவிழாவின்போது, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ஞாயிறு அன்று காலை குழந்தைகளுக்கான புதுநன்மைத் திருப்பலி நடைபெறவுள்ளது. அன்று மாலையில் பேராலய வளாகத்தில் திரளான இறைமக்கள் பங்கேற்கும் திவ்விய நற்கருணைப் பவனியும் நடைபெறவுள்ளது. 

இவ்வாண்டுப் பெருவிழாவின் சிறப்பம்சமாக, ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 05.30 மணிக்கு நிறைவேற்றப்படும் திருவிழாவிற்கான சிறப்புத் திருப்பலியை ஐதராபாத் உயர்மறை மாவட்டப் பேராயரும் கர்தினாலுமான அந்தோனி பூலா தலைமையேற்று நடத்த இருக்கின்றார். தொடர்ந்து அன்று மாலையில் ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் மாலை ஆராதனையும் நடைபெறவுள்ளது.

பெருவிழா கூட்டுத் திருப்பலி ஆகஸ்ட் 05ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயர் ஸ்டீபன் ஆண்டகை அவர்களாலும், உபகாரிகளுக்கானத் திருப்பலி மேனாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை அவர்களாலும் சிறப்பிக்கப்படும்.

அன்னையின் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேராலய அதிபர், பங்குத்தந்தை ஸ்டார்வின், துணைப் பங்குத்தந்தை பிரவீன் ராசு, களப்பணியாளர் சகோ. மிக்கேல் அருள்ராஜ் மற்றும் அடைக்கல அன்னை, அமலவை அருள்சகோதரிகள், சவேரியானா இயேசு சபையினர். லசால் அருள்சகோதரர்கள், பேராலய மேய்ப்புப் பணிக்குழுவினர், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது உதவி பங்குத்தந்தை பிரவீன் ராசு, துணைத் தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின், துணைச் செயலாளர் பெனாட், பொருளாளர் ஜோ சோரிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.