தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரிக்கு சேர முடியாத மாணவர்களுக்கு உதவிய அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்கள் : ஆட்சியர் தகவல்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கல்லூரிக்கு சேர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு ஆதரவாக, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் முதன்முறையாக முன்வந்து கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (21.07.2025), தூத்துக்குடி மாவட்டத்தில் "நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட "பெரிதினும் பெரிது கேள்” உயர்கல்வி வழிகாட்டி முயற்சியின் ஒரு முக்கிய அம்சமாக, பொருளாதார சிக்கல்கள் காரணமாக கல்லூரிக்கு சேர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு ஆதரவாக, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் முதன்முறையாக முன்வந்து கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களின் அழைப்புக்கிணங்க, கீழ்கண்ட நான்கு மாணவர்களுக்காக மூன்று முக்கிய அரசு ஊழியர் சங்கங்கள், அவர்களின் முழுமையான கல்லூரிக் கட்டணத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களது உயர்கல்விக்கான கனவுகளை நிறைவேற்ற வழி வகுத்துள்ளன.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாணவி சக்தி உஷா. எம் (ஜியோ இன்/பர்மாட்டிக்ஸ், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் - CEG Campus) என்பவருக்கு ரூ. 1,26,750.00/-ம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாணவி பத்ம இலக்கியா. எஸ் (புரொடக்ஷன் இன்ஜினீயரிங், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் - MIT Campus) என்பவருக்கு ரூ.1,17,000.00/-ம் தூத்துக்குடி ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் சங்கம் சார்பில் மாணவன் மாதவன். எஸ் மற்றும் மாணவி அனுஷ்யா.பி (சிவில்/புரொடக்ஷன் இன்ஜினீயரிங், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்) ஆகியோருக்கு தலா ரூ. 46,615.00/-ம் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த மாணவர்கள் முழுமையாக உயர்கல்வி பயின்று முடிக்கும் வரை நான்கு ஆண்டுகளுக்கும் இந்தச் சங்கங்கள் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன. இது போன்ற உதவிகள், வறுமையின் காரணமாக உயர் கல்விக்கு தடையாக இருக்கும் சூழ்நிலைகளைக் கடக்க உதவியாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், துத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் (பொ) செந்தில்வேல் முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் அ.சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் ஞா. ஞானராஜ், மாவட்ட பொருளாளர் மா. ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் ஜஸ்டின் செல்லத்துரை, சுகுணா மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சோ. மகேந்திரபிரபு, மாவட்ட செயலாளர் லா.அன்றோ, மாநில தணிக்கையாளர் அ.அன்பு செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் ச.முனியசாமி, மாவட்ட இணை செயலாளர் உ.மாதவன், வட்டார செயலாளர் நாராயணன் மற்றும் தூத்துக்குடி ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் சங்கம் சார்பில் சங்க தலைவர் ரவி, பொதுச் செயலாளர் அலெக்சாண்டர், பொருளாளர் பிரேம்சந்தர் மற்றும் மாவட்ட நிர்வாக செயலாளர் முருகன், செயற்பொறியாளர் ஆகியோர்கள்
கலந்து கொண்டனர்.