ஓசி மது தரமறுத்த டாஸ்மாக் கடை ஊழியருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!

ஓசி மது தரமறுத்த டாஸ்மாக் கடை ஊழியருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!

தெற்கு ஆத்தூர் டாஸ்மாக் கடையில் ஓசி மது தரமறுத்த கடை ஊழியரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூரில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக ஏரல் மார்க்கெட் தெருவை சேர்ந்த சேர்மராஜதுரை (51) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அந்த மதுபான கடையில் மதுபான மாவட்ட அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஆத்தூர் அருகே உள்ள கீரனுரை சேர்ந்த சுந்தரவேல் மகன் கிருஷ்ணகுமார்(40) என்பவர் மதுபான கடைக்கு வந்துள்ளார். 

கடையில் இருந்த சேர்மராஜதுரையிடம் தனக்கு ஓசியில் மதுபானம் தர வேண்டும் என கேட்டுள்ளார். அவர் ஓசியில் மதுபானம் தர முடியாது என்று விற்பனையாளர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், தகராறு செய்ததுடன், அவரை அவதூறாக பேசியதுடன் மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக விற்பனையாளர் சேர்மராஜதுரை கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரை கைது செய்தார்.