தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: கணவன்-மனைவி கைது!
தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள ஐஸ் கேட்டமைன் என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்ததாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் சோதனையிட்டனர்.
அப்போது தாமஸ் மகன் நிர்மல்ராஜ் (37) என்பவரது வீட்டில் ஐஸ் கேட்டமைன் என்ற போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 8 கிலோ போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி என கூறப்படுகிறது. மேலும் நிர்மல்ராஜ், மனைவி ஷிவானி (34) ஆகிய இருவரையும் கைது செய்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதனை இலங்கைக்கு கடத்த முயன்றார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.