ஏரல் தரைப்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம் : கார், இருசக்கர வாகனங்கள் இயக்கம்!

ஏரல் தரைப்பாலம் வழியாக 7 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் புதுப்பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. சிவராமமங்கலம், பெருங்குளம், பேய்க்குளம், இரட்டைதிருப்பதி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் ஏரல் நகருக்குள் வெள்ளம் புகுந்தது.
வீடுகள், கடைகளை வெள்ளம் மூழ்கடித்ததால் மக்கள் உயரமான கட்டிடங்களில் தஞ்சமடைந்தனர். சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட வசதிகள் துண்டிக்கப்பட்டு ஏரல் தனித்தீவு ஆனது. வெள்ளம் சற்று தணிந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு நேற்று ஏரலில் ஒவ்வொரு பகுதியாக மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு இணைப்பு வசதியும் படிப்படியாக வழங்கப்படுகிறது. ஏரல் புதுப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், ஏரல்-குரும்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் புதுப்பாலத்தின் அருகில் உள்ள தரைமட்ட பாலத்தை சீரமைத்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொக்லைன் எந்திரங்கள் மூலம் தரைமட்ட பாலத்தின் இருபுறமும் மண்கொட்டி சீரமைத்தனர். தொடர்ந்து முதல்கட்டமாக அந்தவழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
7 நாட்களுக்கு பிறகு ஏரல் தரைமட்ட பாலம் வழியாக குரும்பூர், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் வாகனங்களில் பயணித்தனர். சீரமைக்கப்பட்ட தரைமட்ட பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓரிரு நாளில் தரைமட்ட பாலத்தில் சீரமைப்பு பணி முழுமையாக நிறைவடைந்ததும் அந்த வழியாக விரைவில் பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.