திமுக அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் தூத்துக்குடி அதிமுகவினர் புகார்!

திமுக அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் தூத்துக்குடி அதிமுகவினர் புகார்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம் பதிவிட்ட அமைச்சர் டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் மனு அளித்தனர். 

தூத்துக்குடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் மற்றும், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜ் மற்றும் நிர்வாகிகள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில், "திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் டிஆர்பி ராஜாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ்தளப் பதிவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவமதிக்கும் வகையில், பொய்யான செய்தியுடன் ஆபாசமான கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டது. 

இது அவரது கண்ணியத்தையும் பதவியையும் தாழ்த்திப் பேசும் வகையிலும், அவரைப் பின்தொடர்கின்ற தொண்டர்களின் உணர்ச்சிகளை புண்படுத்தும் வகையிலும் உள்ளது. மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் போற்றிய அதிமுகவின் கழகக் கொடியையும் அவமதிக்கும் வகையில் பயன்படுத்தி கேலிசித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கக்கூடிய, இரு கட்சித் தொண்டர்களிடையே மோதலை ஏற்படுத்தக்கூடியது.

இது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் BNS Act 2023-ன் கீழ் ஐடி சட்டம் பிரிவு 66, 67, 69A, BNS Act பிரிவு 124, 356, 354E ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இந்த அவதூறு மற்றும் ஆபாச பதிவை உடனடியாக நீக்கி, இதை வெளியிட்டவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.