மின்கம்பத்தில் வேன் மோதி விபத்து: 12பேர் காயம்!!

மின்கம்பத்தில் வேன் மோதி விபத்து: 12பேர் காயம்!!

காயல்பட்டினத்தில் மின்கம்பத்தில் வேன் மோதி கவிழ்ந்ததில் 12 மீனவர்கள் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிங்கித்துறை கடற்கரையில் அங்குள்ள நாட்டு படகில் மீன்பிடிப்பதற்காக தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் வேனில் வந்தனர். மாலையில் மீனவர்கள் வேனில் புறப்பட்டனர். வேனை தூத்துக்குடி அய்யனார்புரம் கீழ அரசரடியை சேர்ந்த காளி சுதாகர் என்பவர் ஓட்டினார்.

காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது அந்தப் பகுதியில் உள்ள ஒப்பளத்து ரோட்டில் இருந்து இருசக்கர வாகனம் குறுக்கே சென்றது. இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காளி சுதாகர் வேனை திருப்பினார். அப்போது, சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின்கம்பம் மீது எதிர்பாராத விதமாக வேன் மோதி கவிழ்ந்தது.  வேனில் இருந்த 12 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

வேன் மோதியதில் காயல்பட்டினம்- திருச்செந்தூர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய உயர் மின் அழுத்தம் சிறிது நேரம் தடைபட்டது. இதுபற்றி அறிந்த ஆறுமுகநேரி மின்சார வாரிய உதவி பொறியாளர் ஜெபசாம் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாற்று வழிகளில் காயல்பட்டினம், திருச்செந்தூர் நகருக்கு மின்சாரம் செல்ல ஏற்பாடு செய்தனர்.