தூத்துக்குடியில் தனியார் பள்ளிகளின் ‘கட்டணக் கொள்ளை’க்கு முடிவு கட்டப்படுமா? – மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் பரபரப்பு மனு!

தூத்துக்குடியில் தனியார் பள்ளிகளின் ‘கட்டணக் கொள்ளை’க்கு முடிவு கட்டப்படுமா? – மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் பரபரப்பு மனு!

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2026–2027 கல்வியாண்டுக்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மீறி அதிக தொகை வசூலிக்கப்படுவதாகக் கூறி, இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தியபடி, தனியார் பள்ளிகள் தாங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாக அறிவிப்புப் பலகைகளில் பெற்றோர்கள் தெளிவாக அறியும் வகையில் வெளியிட வேண்டும் என்ற கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாமல் புறக்கணித்து வருவதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதை மறைப்பதற்காகவே இந்த விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்றும் மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், கல்வி என்பது சேவையாக இருக்க வேண்டிய நிலையில், சில கல்வி நிறுவனங்கள் அதை லாப நோக்க வணிகமாக மாற்றி வருவதாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனி ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து, மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் தொகை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். ராம்குமார் தலைமையில் மனு அளித்துள்ளனர்.

இந்நிகழ்வின்போது இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சாம், வெற்றி , பிரான்சிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த கோரிக்கை, புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.