தூத்துக்குடியில் பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக் கொலை: பட்டப் பகலில் பயங்கரம்!
தூத்துக்குடி அருகே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து இறந்துவிட்டார். இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டையில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
சின்னமணிக்கும் அவரது கணவரின் தம்பி ராஜேஸ் கண்ணன் (20) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை சின்னமணி எப்போதும் வென்றான் வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்டாப்பில் பேருந்துக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குவந்த ராஜேஸ் கண்ணன், சின்னமணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் அவர் எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் பஸ்டாப்பில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.