தூத்துக்குடியில் புதுமணத் தம்பதி கொலை வழக்கில் பெண்ணின் தந்தை கைது!
தூத்துக்குடியில் புதுமணத் தம்பதியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம் (24), தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதற்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. கடந்த 30-ந்தேதி மாரிச்செல்வம், கார்த்திகாவை அழைத்து கொண்டு கோவில்பட்டிக்கு சென்று விட்டாா். அங்குள்ள கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின்னர் கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். புதுமண தம்பதி கோவில்பட்டியிலேயே தங்கி இருந்தனர்.
திருமணமாகி 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் 2 பேரும் முருகேசன்நகரில் உள்ள மாரிச்செல்வத்தின் வீட்டுக்கு வந்தனர். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் மாரிச்செல்வம், கார்த்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். நேற்று மாலையில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்து, அங்கு இருந்த மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டது.
தூத்துக்குடியில் திருமணமான 3 நாட்களில் காதல் தம்பதி வீடு புகுந்து சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பலை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் புதுமணத் தம்பதி கொலை வழக்கில் பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.