“விசில் சத்தம் முழங்கும் தூத்துக்குடி!” – 5ஆம் வகுப்பு சிறுமி பாடிய விஜய் பிரச்சார பாடல் வெளியீடு… வெற்றி நிச்சயம் என ஸ்ரீநாத் அதிரடி பேட்டி

“விசில் சத்தம் முழங்கும் தூத்துக்குடி!” – 5ஆம் வகுப்பு சிறுமி பாடிய விஜய் பிரச்சார பாடல் வெளியீடு… வெற்றி நிச்சயம் என ஸ்ரீநாத் அதிரடி பேட்டி

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் வெளியிட்ட ஒரு பிரச்சார பாடல் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். கடந்த 4ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த அவர், தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநகரின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருவதோடு, மீனவர் மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியைச் சேர்ந்த மீனவரும் பாடலாசிரியருமான சுஜய், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை ஆதரிக்கும் வகையில் ஒரு தேர்தல் பிரச்சார பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலை அவரது மகளும் ஐந்தாம் வகுப்பு மாணவியுமான சைஜு பாடியுள்ளார்.

இந்த சிறுமி பாடிய பிரச்சார பாடலை, இன்று தூத்துக்குடியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் வைத்து வேட்பாளர் ஸ்ரீநாத் வெளியிட்டார். பின்னர் அந்த சிறுமியை பாராட்டி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீநாத், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்காக பிரச்சார பாடல் பாடிய இந்த சிறுமிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகுந்த ஆதரவு கிடைத்து வருகிறது. எங்கு பார்த்தாலும் விசில் சத்தம் தான் கேட்கிறது. இதனால் 2026ஆம் ஆண்டு தமிழக முதல்வராக தலைவர் விஜய் பதவியேற்பது உறுதி.

மேலும், “சினிமா துறையில் சாதனை படைத்த தலைவர் விஜய், அரசியல் துறையிலும் அதேபோல் சாதனை படைத்து மக்கள் ஆதரவுடன் முதல்வராக உயர்வார்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் கோல்டன், மற்றும் கட்சி நிர்வாகி கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறுமியின் குரலில் ஒலித்த இந்த பிரச்சார பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, தேர்தல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.