தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்

தூத்துக்குடியில் இ-ஃபைலிங் முறையைக் கண்டித்து டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையைக் கண்டித்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இ-ஃபைலிங் கட்டாயம் என்பதை கைவிடக் கோரி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், தமிழ்நாடு - பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மறு உத்தரவு வரும் வரை இ-ஃபைலிங் முறையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது. 36 நாட்களுக்கு பின்பு இன்று (7ம் தேதி) முதல் நீதிமன்றத்திற்கு சென்று தங்களது பணிகளை தொடர உள்ளனர். இதனால் வழக்கம் போல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற உள்ளது