விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை? – ‘பெற்றோர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்.. | பரபரப்பு பேட்டி

விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை? – ‘பெற்றோர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்.. | பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாணவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்று வரும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வந்த நிலையில், மார்ச் 10ஆம் தேதி நேற்று முன் தினம் மாலை சுமார் 5:30 மணியளவில் வீட்டிலிருந்து உடல் உபாதை கழிப்பதற்கு காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். 

அங்கு பள்ளி மாணவி தொடர்பான புகார் என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி போலீஸார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மார்ச் 11ஆம் தேதி நேற்று காலை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில் உறவினர்கள் நேற்று மதியம் வேடநத்தம் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின்படி ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று அவரே  ஒவ்வொரு வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தினார்.

இது குறித்து மாணவியின் தாய் கூறும் போது, குளத்தூர் காவல் நிலையத்திலும் பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்த போதே போலீஸார் உரிய முறையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இந்த துயர சம்பவம் நடந்திருக்காது. காவல்துறையினரின் இந்த அலட்சியத்தால் மாணவி உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டினார்..

மாணவியின் உறவினர் வெள்ளைச்சாமி கூறுகையில், “புகார் அளிக்க சென்றபோது போலீஸார் தவறான வார்த்தைகள் பேசினர். ‘உங்கள் குழந்தை யாருடனாவது ஓடிப்போயிருப்பாள்’ என்று கூறினர். உடலை கூட போலீஸார் கண்டுபிடிக்கவில்லை., நாங்கள்தான் கண்டுபிடித்தோம். அதன் பின்னர்தான் போலீஸார் வந்தனர். இந்த விவகாரத்தில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

மாணவியின் அத்தை சுப்புலட்சுமி கூறுகையில், “காலையில் காட்டுப்பகுதியில் தேடிப் பார்த்தோம். அப்போது எதுவும் இல்லை. பிறகு மதியம் மீண்டும் தேடச் சென்ற போது அங்கு தான் உடல் கிடந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, “சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்,” என்று தெரிவித்தனர்.

சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாத வரை மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் வேடநத்தம் கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களும் சோகத்தில் மூழ்கியுள்ளன..