தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2,500 கிலோ கஞ்சா பறிமுதல் : 7பேர் கைது!

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2,500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2,500 கிலோ கஞ்சா பறிமுதல் : 7பேர் கைது!

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2,500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி "ஆபரேசன் கஞ்சா வேட்டை 4.0" மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை  பொருட்கள் முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமையன்று திருச்செந்தூரில் காந்திபுரம் பகுதியில்  ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 120 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில், மதுரை கீரைதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக மதுரை ஏ.எல்.எஸ்., நகரைச் சேர்ந்த பால்பாண்டி மகன் ராஜ்குமார் (45), கண்ணன் மகன் சுகுமார் (42) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஆரோன் என்பவரிடம் கஞ்சா வாங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதுரை போலீசார் ஆரோனை கைது செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில், சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் புதுக்குளம் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கஞ்சா வைத்திருப்பதாக தெரிவித்தார். அவரது தகவலின் பெயரில் மதுரை போலீசார் உடனடியாக வேலவன் புதுக்குளம் கிராமத்திற்கு விரைந்து வந்து நேற்று நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது நிறுத்தப்பட்டிருந்த வேனை சோதனை செய்தனர். அதில் சுமார் 500 மூட்டைகளில் சுமார் 2,500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக 7பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தனர்? இதனை தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுரையில் பிடிபட்ட நபரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே நேற்று திருச்செந்தூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சா பிடிபட்ட நிலையில் இன்று சாத்தான்குளம் 2,500 கிலோ கஞ்சா பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.