தூத்துக்குடியில் சிவன் கோவிலில் 216 சிவலிங்க பூஜை : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

தூத்துக்குடியில் சிவன் கோவிலில் 216 சிவலிங்க பூஜை : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

தூத்துக்குடி சிவன்கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி 216 சிவலிங்க பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

மகா சிவராத்திரியன்று விரதம் இருந்து சிவனை வழிபட்டால் பாவங்கள் விலகும். சிவபூஜை எல்லா பூஜைகளிலும் உயர்ந்தது. சிவனை வழிபடுபவர்கள் அனைத்து செல்வங்களையும் அடைவார்கள் என்பது ஐதீகம். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி நாள் சிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கோவில்களில் நேற்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 12.30 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலையில் பிரதோச பூஜையும் நடந்தது. மாலை 6 மணிக்கு 216 சிவலிங்க பூஜை, திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணி, 12 மணி, அதிகாலை 2 மணி, 5 மணி ஆகிய நான்கு கால பூஜைகளும் நடந்தது.

இரவு 7 மணிக்கு 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி, 8 மணிக்கு 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தேவார போட்டி, இரவு 9 மணிக்கு 50-க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 12 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு பட்டிமன்றமும் நடந்தது. இதே போன்று பக்தர்களுக்கு ஓம்நமச்சிவாய எழுதும் போட்டி நடத்தப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி (சிவன்கோவில்), செந்தில்குமார் (வைகுண்டபதி பெருமாள் கோவில்), கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி மற்றும் அறங்காவலர்கள் செய்து இருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் நேற்று மகா சிவராத்திரி விழா மற்றும் மாதாந்த வெள்ளி பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம,் தீபாராதனையும், 4 மணிக்கு நான்காம் கால அபிஷேகம், தீபாராதனை, திருப்பள்ளியறை பூஜை, பைரவர் பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பக்தி சொற்பொழிவு, பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது.