கொலை வழக்கில் 3பேர் கைது: சறுக்கி விழுந்ததில் கை, கால் முறிவு!

கொலை வழக்கில் 3பேர் கைது: சறுக்கி விழுந்ததில் கை, கால் முறிவு!

செய்துங்கநல்லூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முன்றபோது அவர்கள் காயம் அடைந்தனர். 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பற்பநாதபுரத்தை சேர்ந்த வேல்சாமி மகன் ஐயப்பன் (எ) சுரேஷ் (31) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10.02.2024 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனார்குளம்பட்டி சுடுகாடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பற்பநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான ராஜ் மகன் அன்பு (எ) அன்பன் (24), ஆரோக்கியசாமி மகன் மஜ்னு (எ) சிவபெருமாள் (19) மற்றும் பாளையங்கோட்டை சமத்துவபுரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் கார்த்திக் பாண்டியன் (29) ஆகியோர் மேற்படி ஐயப்பன் (எ) சுரேஷை முன்விரோதம் காரணமாக வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  விசாரணை மேற்கொண்டு ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)  வசந்தராஜ்  மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர்  பத்மநாபபிள்ளை மற்றும் உதவி ஆய்வாளர்  ராஜபிரபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசாருக்கு சம்மந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வல்லநாடு பகுதியல் உள்ள ஒரு கல்லூரி அருகே மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த அன்பு (எ) அன்பன், மஜ்னு (எ) சிவபெருமாள், கார்த்திக் பாண்டியன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த 2023ம் வருடம் கொலையுண்ட ஐயப்பன் (எ) சுரேஷ் என்பவரின் தந்தை வேல்சாமியின் உறவுக்காரனான டேனியல்ராஜ் என்பவரை மேற்படி எதிரிகளான அன்பு (எ) அன்பன், மஜ்னு (எ) சிவபெருமாள் மற்றும் மகேஷ் மகன் ஜீவா (24) ஆகியோர் தாக்கிய போது ஐயப்பன் (எ) சுரேஷ்  3 பேரையும் தட்டிக் கேட்டுள்ளார். 

இதனையடுத்து மேற்படி 3 பேரும் ஐயப்பன் (எ) சுரேஷை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஐயப்பன் (எ) சுரேஷ் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் மேற்படி 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் கடந்த பொங்கல் விடுமுறையின் போது மீண்டும் மேற்படி எதிரி அன்பு (எ) அன்பன் வேல்சாமியிடம் தகராறு செய்ததில் வேல்சாமி அளித்த புகாரின் பேரிலும் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்படி எதிரிகள் தங்கள் மீது வழக்கு பதிவு செய்ய காரணமான வேல்சாமி மற்றும் அவரது மகன் ஐயப்பன் (எ) சுரேஷ் மீதும் முன்விரோதத்தில் இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 10.02.2024 அன்று அந்த முன்விரோதம் காரணமாக கொலையுண்ட ஐயப்பன் (எ) சுரேஷ் செய்துங்கநல்லூருக்கு வந்து புதிய குடும்ப அட்டை பெறுவதற்காக விண்ணபித்து விட்டு திரும்பி ஊருக்கு போகும் போது மேற்படி சம்பவ இடத்தில் வைத்து அன்பு (எ) அன்பன், மஜ்னு (எ) சிவபெருமாள் மற்றும் அவர்களுடன் வந்த கார்த்திக் பாண்டியன் ஆகிய 3 பேரும் ஐயப்பன் (எ) சுரேஷை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்று, பின்னர் தூத்துக்குடி தாளமுத்துநகர் பாரதிநகரில் தங்கிவிட்டு 11.02.2024 அன்று காலை அங்கிருந்து புறப்பட்டு திருநெல்வேலி நோக்கி இருசக்கர வாகனத்தில் வரும்போது  வாகைகுளத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சறுக்கி  கீழே விழுந்ததில் அன்பு (எ) அன்பனுக்கு இடது கையிலும், மஜ்னு (எ) சிவபெருமாளுக்கு வலது கையில் வீக்கமும், கார்த்திக் பாண்டியனுக்கு இடது கால் முட்டி மற்றும் பெருவிரலும் காயம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தனிப்படை போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அன்பு (எ) அன்பன், மஜ்னு (எ) சிவபெருமாள், கார்த்திக் பாண்டியன் ஆகிய 3 பேரும் அவர்களது நண்பர்கள் மற்றொரு 3 பேருடன் சேர்ந்து ஏற்கனவே 10.02.2024 அன்று காலை திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராமச்சந்திரன் மகன் பாபு என்பவரை கொலை செய்து விட்டு பின்னர் அன்பு (எ) அன்பன், மஜ்னு (எ) சிவபெருமாள் மற்றும் கார்த்திக் பாண்டியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து மேற்படி ஐயப்பனையும் அரிவாளால் தாக்கி கொலை செய்ததும் தீவிர விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து பின்னர் 3 பேரையும் ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் எண் 1  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.