பனையூரில் விஜய் காரை திடீரென வழிமறித்த தவெக தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி ... காலை முதல் காத்திருப்பு.. பின்னணி என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களுக்கான அடுத்தகட்ட அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ள நிலையில், சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் தற்போது பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், ஏற்கனவே விடுபட்ட மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகாலை முதலே தலைமை அலுவலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த முக்கிய நிகழ்வில் கட்சியின் தலைவர் விஜய் நேரில் பங்கேற்று, புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் வருகை மற்றும் நிர்வாகிகள் கூடல் காரணமாக, அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணிகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, முதல்முறையாக பெண் பவுன்சர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சி அலுவலகத்தின் நுழைவாயில் மற்றும் உட்புற பகுதிகளில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்க வந்த விஜய்யின் காரை தவெக பெண் நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பெண் பெயர் அஜிதா ஆக்னல்.
இன்று காலை முதலே அஜிதா என்பவர் ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகம் முன்பு முகாமிட்டிருந்தார். அழுதபடியே கவலையுடன் நின்றிருந்த அவரை சுற்றி அவரது ஆதரவாளர்களும் குழுமியிருந்தனர்.
விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோதே அதில் பணியாற்றி வந்தவர் அஜிதா ஆக்னல். கட்சியாக மாறியபின் பல்வேறு பணிகளை செய்துவந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர் பொறுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அஜிதாவுக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து விடுபட்ட மாவட்டச் செயலாளர் இன்று அறிவிக்கப்பட இருந்தது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், இதிலும் அஜிதாவின் பெயர் இல்லை என்ற தகவல் வெளிவந்ததால் காலை முதலே பனையூரில் காத்திருந்த அஜிதா விஜயின் காரை மறித்து மனு கொடுக்க முயன்றார். ஆனால் காரை மறித்த அவரை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர்.