கயத்தார் அருகே சோகம்: மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காமல் 42 வயது கணவர் தூக்கிட்டு தற்கொலை

கயத்தார் அருகே சோகம்: மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காமல் 42 வயது கணவர் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே மனைவி உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல், 42 வயதுடைய தொழிலாளி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கயத்தார் அருகே உள்ள ஆசூர் கிராமம், வடக்குத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (42), முத்துப்பாண்டியின் மகன் ஆவார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி கேரளாவில் உள்ள பழைய இரும்புக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, குடும்பத் தகராறு காரணமாக அவரது மனைவி விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கருப்பசாமி கடும் மன உளைச்சலிலும் துயரத்திலும் இருந்து வந்ததாகவும், அதிகளவில் மது அருந்தும் பழக்கத்திற்கும் ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த கருப்பசாமி, ஆசூரில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கயத்தார் காவல் நிலைய போலீசார், கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு: தற்கொலை எண்ணங்கள் அல்லது கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டால், நம்பிக்கைக்குரிய குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது மனநல நிபுணர்களிடம் உடனடியாக உதவி பெறுவது மிகவும் முக்கியம்.