முள்ளக்காடு ராஜீவ் நகர் குளத்தை சீரமைக்க கோரிக்கை: மாவட்ட ஆட்சியர், மேயரிடம் டி.ஒய்.எப்.ஐ. மனு

முள்ளக்காடு ராஜீவ் நகர் குளத்தை சீரமைக்க கோரிக்கை: மாவட்ட ஆட்சியர், மேயரிடம் டி.ஒய்.எப்.ஐ. மனு

தூத்துக்குடி மாநகராட்சி 58-வது வார்டுக்கு உட்பட்ட முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியில் அமைந்துள்ள குளத்தை முழுமையாக தூர்வாரி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவில், முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியில் உள்ள குளம் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்பட்டு பராமரிக்கப்படாததால், குளத்தைச் சுற்றி கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உப்பள கழிவுநீர் மற்றும் வாறுகால் கழிவுநீர் குளத்தில் கலப்பதால், குளம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குளத்தை முழுமையாக தூர்வாரி சீரமைப்பதுடன், குளத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து, நடைமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, மாவட்ட ஆட்சியரிடமும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பி. ஜெகன் பெரியசாமி அவர்களிடமும் வழங்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக் கொண்ட மேயர் பி. ஜெகன் பெரியசாமி, குளத்தை விரைவில் நேரில் ஆய்வு செய்து, தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததாக டி.ஒய்.எப்.ஐ. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெ. நேசமணி, மாவட்ட துணைச் செயலாளர் மாரிச்செல்வம், ராஜீவ் நகர் கிளை உறுப்பினர் காசிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.