தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த வாலிபர் கைது

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த வாலிபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி கோமஸ்புரம் சுடுகாடு பகுதியில் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்து, கஞ்சாவுடன் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமஸ்புரம் சுடுகாடு பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சோதனை செய்தபோது, விற்பனைக்காக 8 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தாளமுத்துநகரைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கார்த்திக்ராஜா என்ற ஜப்பான் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்காக விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.